Thursday, 2 April 2020

ஏற்றமும் தாழ்வும்


ஏற்றமும் தாழ்வும்


ஏற்றமும் தாழ்வும் இல்லாமற் செய்ய
எல்லோர் வகுப்பிலும் ஒரே சீருடை.
குலம், குணம், பணம், அழகு,
எந்தப் பேதமும் எவர்க்கும் இல்லை.

அடித்தார் பிடித்தார் அழகாய்ச் சிரித்தார்
கேலியும் கிண்டலும் - கொட்டம் அடித்தார்
பட்டாம் பூச்சியாய் பறந்தே திரிந்தார்
பாட்டும் பாடி கூத்தும் ஆடினார்

அன்பாய் அம்மா அதட்டும் அப்பா
அண்ணன் தம்பி அக்கா தங்கை
அடிதடி சண்டை அடிக்கடி நடக்கும்
அனைவர் நெஞ்சிலும் அன்பும் தவழும்

உடுப்பில் இருந்து உணவு வரைக்கும்
அன்பாய் பகிரும் அழகிய வாழ்வு
ஒன்றாய்ச் சிரித்தார் ஒன்றாய் அழுதார்
உறவினை மதித்து ஒன்றாய் வாழ்ந்தார்

காலம் கரைந்தது கனவும் வளர்ந்தது
படிப்பு பட்டம் பதவி பணம்
எல்லாருக்கும் எல்லாம் இங்கு
எப்படி ஐயா சமனாய்க் கிடைக்கும்

உறவும் விரிந்திட உலகம் சுருங்கிட
ஒவ்வொரு திக்காய் உறவும் பிரிந்தது
அந்தஸ்து என்ற அரக்கன் வந்து
அகத்தின் உள்ளே அமர்ந்து விட்டான்

ஒன்றாய்ப் படித்து ஒன்றாய் மகிழ்ந்த
உற்ற நண்பன் எட்டிப் போனான்
ஒன்றாய் உண்டு ஒன்றாய் உடுத்த
அண்ணன் தம்பி தூர விலகினர்

பணத்தைப் பார்த்து சேரும் உறவுகள்
அடிக்கடி நிறத்தை மாற்றிக்கொண்டனர்
சமத்துவம் இங்கே கரைந்து போனது
அன்பும் உறவும் அருகிப் போனது