Wednesday, 21 September 2022

அகந்தை

 

யாருக்கில்லை அகந்தைஇங்கு
யாருக்கில்லை அகந்தை

கற்றவன் என்றால்
வித்துவச் செருக்கு

காசைக் கண்டவன்
செல்வச் செருக்கு

பலமாய் இருந்தால்
அதிலொரு செருக்கு

புகழில் மிதந்தால்
அதிலும் செருக்கு

அழகாய் இருந்தால்
அதற்கொரு செருக்கு

கலையில் சிறந்தால்
அதுவும் செருக்கு

கண்ணகி காட்டிய
கற்பிலும் செருக்கு

நற்கவி பாரதி
நாவினிற் செருக்கு

நக்கீரர் காட்டினார்
நற்றமிழ்ச் செருக்கு

எமனேறும் பரியே
என்று பாடிய

ஔவையின் பாட்டிலும்
தொங்குது செருக்கு

வரத்தினைப் பெற்ற
சூரனின் அகந்தை

 

அதனை அழித்தது
முருகனின் அகந்தை

துட்டனாக்கியது
துரியனின் அகந்தை

அவனை அழித்தது
பீமனின் அகந்தை

சிவனை வணங்கும்
சித்தர்கள் ஆயினும்

சிந்தை எங்கும்
அகந்தை தானே

சிவனுக்கிருந்தது
அதுவும் செருக்கு

சிவனுடன் மோதிய
உமையவள் செருக்கு

எனக்கும் இருக்கும்
உனக்கும் இருக்கும்

உலகில் இங்கே
எவர்க்கும் இருக்கும்

செருக்குடன் வாழ்ந்தால்
மகிழ்வும் இருக்கும்

செருக்கைக் கண்டால்
வெறுப்பும் இருக்கும்

செருக்கில் மிதந்தால்
அழிவும் இருக்கும்

செருக்கே செருக்கால்
செருப்பாய் அழியும்

அராலியூர் அருட்செல்வம்

Thursday, 25 August 2022

போதை

             போதை

மது ஒரு போதை மாது ஒரு போதை
பதவி ஒரு போதை பட்டம் ஒரு போதை

காதல் ஒரு போதை காமம் ஒரு போதை
அழகில் ஒரு போதை அறிவில் ஒரு போதை

மானம் ஒரு போதை ரோசம் ஒரு போதை
பணம் ஒரு போதை பாசம் ஒரு போதை

நேர்மை ஒரு போதை உண்மை ஒரு போதை
கர்வம் ஒரு போதை கண்ணியம் ஒரு போதை

ரசித்தால் இனிக்கும் ருசித்தால் மயக்கும்
வலிய வந்திடும் விலக மறுத்திடும்

தேடல்

                 தேடல்


காசு பணம் தேடி நாமும் ஓடுகின்றோமே - அது
கை நிறைய வந்தபோதும் ஓயவில்லையே
ஓடி ஓடிச் சேர்த்தபணம் நிலைப்பதில்லையே – அது
ஓரிடத்தில் ஒருநாளும் நிற்பதில்லையே

பணக்காரச் சொந்தம் தேடி ஒடுகிறோமே – நாமும்
பண்பான சொந்தம் தன்னை நாடவில்லையே
ஓடிவந்து உதவுவோர்க்கு மவிசுமில்லையா – இங்கு
வாழும்போது நாடுவோர்க்கு மானமில்லையா

பாடசாலை தேடி நாமும் ஓடுகின்றோமே – அங்கு
பலவிதமாய் பாடங்களும் பயிலுகின்றோமே
கற்றபடி நாமும் இங்கே வாழுகின்றோமா – இல்லைக்
கண்டபடி வாழ நாமும் தயங்குகின்றோமா

உண்மை அன்பு நேர்மை என்று புலம்புகின்றோமா – இல்லை
ஊருக்காக உத்தமர்போல் உலவுகின்றோமா
சலனமின்றிக் கொள்கையுடன் வாழுகிறோமா – இல்லை
சந்தர்ப்ப வாதிகளாய் மாறுகின்றோமா

மனிதம் தன்னைத் தேடி நாமும் ஓடுகின்றோமா – இல்லை
மந்தைக் கூட்டம் போல நாமும் வாழுகின்றோமா
உண்மை வாழ்வு என்னவென்று உணருகின்றோமா – இல்லை
ஒய்யார வாழ்வுக்காக ஓடுகின்றோமா!!!

                                    அராலியூர் அருள்