தேடல்
காசு பணம் தேடி நாமும் ஓடுகின்றோமே - அது
கை நிறைய வந்தபோதும் ஓயவில்லையே
ஓடி ஓடிச் சேர்த்தபணம் நிலைப்பதில்லையே – அது
ஓரிடத்தில் ஒருநாளும் நிற்பதில்லையே
பணக்காரச் சொந்தம் தேடி ஒடுகிறோமே – நாமும்
பண்பான சொந்தம் தன்னை நாடவில்லையே
ஓடிவந்து உதவுவோர்க்கு மவிசுமில்லையா – இங்கு
வாழும்போது நாடுவோர்க்கு மானமில்லையா
பாடசாலை தேடி நாமும் ஓடுகின்றோமே – அங்கு
பலவிதமாய் பாடங்களும் பயிலுகின்றோமே
கற்றபடி நாமும் இங்கே வாழுகின்றோமா – இல்லைக்
கண்டபடி வாழ நாமும் தயங்குகின்றோமா
உண்மை அன்பு நேர்மை என்று புலம்புகின்றோமா – இல்லை
ஊருக்காக உத்தமர்போல் உலவுகின்றோமா
சலனமின்றிக் கொள்கையுடன் வாழுகிறோமா – இல்லை
சந்தர்ப்ப வாதிகளாய் மாறுகின்றோமா
மனிதம் தன்னைத் தேடி நாமும் ஓடுகின்றோமா – இல்லை
மந்தைக் கூட்டம் போல நாமும் வாழுகின்றோமா
உண்மை வாழ்வு என்னவென்று உணருகின்றோமா – இல்லை
ஒய்யார வாழ்வுக்காக ஓடுகின்றோமா!!!
அராலியூர் அருள்
No comments:
Post a Comment