Friday, 6 June 2025

 பொய்யாய் வாழ்க்கை

பணத்துக்காகப் பொய் பதவிக்காகப் பொய்
மண்ணுக்காகப் பொய் பொன்னுக்காகப் பொய்

சொத்துக்காகப் பொய் சுகத்துக்காகப் பொய்
பகட்டுக்காகப் பொய் பவிசுக்காகப் பொய்

நல்லவனாக உலகில் உன்னை
நயமாய்க் காட்டிட ஆயிரம் பொய்கள்

உறவைப் பிரித்திட எத்தனை பொய்கள்
ஊரைக் குழப்பிட எத்தனை பொய்கள்

பொய்யும் புழுகும் ஊரில் இன்று
புயலில் கலையும் புழுதியாகிட

உண்மை இங்கே ஊமையாகுது
நேர்மை இங்கே நிலைகுலையுது

பொய்யால் பொய்யாய் வாழும் மனிதா
பொய்யைப் பொறுப்பாய் உணர்வாய் ஒருநாள்

                           திரு அருள்


Tuesday, 4 March 2025

அப்பா

 அப்பாஒரு கவிதை

அதில்

கண்டிப்பிருக்கும் – உன்னை வழிப்படுத்த
கனிவிருக்கும் – உன்னை மகிழ்விக்க

வாழ்த்திருக்கும் – உன்னை ஊக்குவிக்க
வளமிருக்கும் – உன்னை உய்ர்த்திவிட

அறிவுரை இருக்கும் – உன்னை நெறிப்படுத்த
அலங்காரம் இருக்கும் – உன்னை அழகுபடுத்த

மிடுக்கிருக்கும் – உன் வெற்றியில் மகிழ
துடுக்கிருக்கும் – உன்னுடன் விளையாட

கனவிருக்கும் – உன்னை உயர்த்திப் பார்க்க
கடனிருக்கும் – உன்னை உயர்த்தி விட

 

தன்னலம் பாரார் – உன்னலம் பேணிட
பொன் நிலம் சேர்ப்பார் – உன்வளம் உயர்த்திட

தன்னுடல் சோரார் – உன்னுடல் வளர்த்திட
தன்னுயிர் கொடுப்பார் – உன்னுயிர் காத்திட

தந்தையாய் மாறிடு – உன்
தந்தையை உணர்ந்திட

சிறந்த தனயனாய் வாழ்ந்திடு –
உன் தந்தை மகிழ்ந்திட

                 அராலியூர் அருட்செல்வம்

Tuesday, 25 February 2025

நரிகள் வாழ்ந்திட

வெட்டு ஒன்று துண்டு ரண்டு சொல்லாதீங்க
வெளிப்படையாய் வார்த்தைகளைக் கொட்டிடாதீங்க

அமைதியாக இருப்பவனை நம்பாதீங்க – அவன்
அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கிறாங்க

நரிகள் வாழும் பூமியிது சொல்லுறேனுங்க
நல்லவன்போல் எல்லாரும் நடிக்கிறானுங்க

அமைதியாக இருப்பவனே அறிவாளியாம்
அடுத்தவன் வம்புக்கவன் போவதில்லையாம்

நேருக்குநேர் கேட்டுவிட்டால் கோபக்காரனாம்
நெத்தியடி கொடுத்துவிட்டால் அகங்காரனாம்

முகத்துக்குநேர் சொல்லுதற்கு துணிவு இல்லீங்க
முதுகுக்குப் பின் நரிக்கதைகள் பரப்புறானுங்க

ஊருக்கெல்லாம் அமைதியாக நடிக்கிறானுங்க
உள்ளுக்குள்ளே சுயநலமாய்ச் சுத்துறானுங்க

கொள்கை என்ற ஒன்றை மட்டும் கேட்டுடாதீங்க
நரிகள் அதை விற்று ரொம்ப நாளாச்சுங்க

நரிகள் இங்கே நல்லவராய் சுத்துறாருங்க
நல்லவர்க்கு வாழ இங்கு முடியாதுங்க


             அராலியூர் அருட்செல்வம்


Wednesday, 27 November 2024

மதம் அது வாழ்ந்திட மனிதம் வீழுது

 கந்தர் சஷ்டியாம் கௌரி காப்பாம்
கடவுளை வேண்டி கனமான விரதமாம்

மரணவீடு செல்லக் கூடாதாம்
செலவு வீட்டில் உண்ணக் கூடாதாம்

உற்றோர் அழுதிட உறவுகள் கதறிட
உள்ளே இருந்து உத்தம விரதமாம்

உறவை மறந்து விரதம் இருக்க
உனக்கு எந்தக் கடவுள் சொன்னார்?

மனிதம் உலகில் வாழத்தானே
மதத்தின் பேரில் மார்க்கம் தந்தார்

மதத்தின் பேரில் மார்க்கம் – தந்து
மனிதம் தன்னை மறத்தல் முறையோ

அராலியூர் அருட்செல்வம்

 

 

 

Monday, 20 May 2024

ஊருக்குபதேசம்

 உலகைப் பார்த்தேன் உரக்கச் சிரித்தேன்
உண்மை சொன்னால் உதைப்பார் தானோ
ஊருக்கெல்லாம் உரக்கச் சொல்வார்
உள்ளுக்குள்ளே சிரித்துக்கொள்வர்

தமிழே தமிழே இனிமை என்பார்
தமிழின் பெருமை உரக்கச் சொல்வார்
தமிழே அறியாத் தமது பிள்ளை
தட்டிக்கேட்க யாருமில்லை

உரிமை வேண்டும் வேண்டும் என்று
உரக்கப் பாடு தமிழா என்பார்
ஊரைவிட்டு ஒழிந்து ஓடி
உலகில் எங்கோ பதுங்கிக் கொள்வார்

சீதனம் என்றால் அசிங்கம் என்று
சிறப்பாய் விறைப்பாய் மேடைப் பேச்சு
சீதனம் கேட்டு சினப்பார் வீட்டில்
சீவியம் வைக்கா வீடும் வேண்டும்

கோயில் கட்டக் காசு வேண்டும்
கோரிக்கைதான் போட்டால் போதும்
கொடுத்தால் தானே தருவார் கடவுள்
கோடி ரூபாய் கொட்டுமையா

பசியால் வாடும் உறவு ஒன்று
பத்தோ நூறோ கேட்டால் போதும்
காசு விளையும் மரத்தை நாமும்
காணவில்லைத் தோழா என்பார்

நன்றி மறவா நாணயம் வேண்டும்
நலமாய் எமக்குக் கற்றுத் தந்தார்
பணத்தைப் பார்த்தே உறவைச் சொல்வார்
பண்பும் இங்கே தொலைந்தே போச்சே!!!

காசு

காசு காசு காசு என்று அலைகிறாரு பாரு
காசுக்கிங்கே மதிப்பை அள்ளித் தருகிறாரு பாரு


காசு என்றால் வாயை இங்கே பிளக்கிறாரு பாரு
வாயில் போன ஈயைக் கூட மறக்கிறாரு பாரு

காசுக்காக ஊரு ஊராய் அலையுறாரு பாரு
காசு தானே வாழ்க்கை என்று நினைக்கிறாரு பாரு

வேறு ஊரு சென்ற பின்னே ஏங்கிறாரு பாரு
நம்ம ஊரு சொர்க்கம் என்று புலம்பிறாரு பாரு

நம்ம ஊரு வந்து அவர் சுற்றுவாரு பாரு
காசு இல்லா ஏழை வாசல் மறந்திடுவார் பாரு

காசு வந்து சேர்ந்தபோது சூழும் சொந்தம் பாரு
அந்தக் காசு உன்னை நீங்கி விட்டால் ஓடிவிடும் பாரு

காசு உள்ள மாப்பிள்ளைக்காய் ஏங்கிறாரு பாரு
கண்ணியத்தை யாரு இங்கே தேடுறாரு பாரு

காசுக்காரன் சொன்னதெல்லாம் வேதமாச்சு பாரு
காசைக்காட்டி ஊரையெல்லாம் வாங்கிறாரு பாரு

ஒற்றுமையாய் ஊரில் வாழ்ந்த காலமெல்லாம் போச்சு
காசு வந்து நம்ம ஊரு நாசமாகப் போச்சு

பாட்டி தந்த கவளம் இன்னும் இனிக்கிறதைப் பாரு
அதனை வாங்க கோடி பணம் போதாது பாரு

காசு மட்டும் வாழ்க்கை இல்லைப் புரிந்திடுவாய் பாரு
அப்போ எட்டி நின்ற ஏழைச் சொந்தம் உதவிடுமே பாரு