Friday, 6 June 2025

 பொய்யாய் வாழ்க்கை

பணத்துக்காகப் பொய் பதவிக்காகப் பொய்
மண்ணுக்காகப் பொய் பொன்னுக்காகப் பொய்

சொத்துக்காகப் பொய் சுகத்துக்காகப் பொய்
பகட்டுக்காகப் பொய் பவிசுக்காகப் பொய்

நல்லவனாக உலகில் உன்னை
நயமாய்க் காட்டிட ஆயிரம் பொய்கள்

உறவைப் பிரித்திட எத்தனை பொய்கள்
ஊரைக் குழப்பிட எத்தனை பொய்கள்

பொய்யும் புழுகும் ஊரில் இன்று
புயலில் கலையும் புழுதியாகிட

உண்மை இங்கே ஊமையாகுது
நேர்மை இங்கே நிலைகுலையுது

பொய்யால் பொய்யாய் வாழும் மனிதா
பொய்யைப் பொறுப்பாய் உணர்வாய் ஒருநாள்

                           திரு அருள்


Tuesday, 4 March 2025

அப்பா

 அப்பாஒரு கவிதை

அதில்

கண்டிப்பிருக்கும் – உன்னை வழிப்படுத்த
கனிவிருக்கும் – உன்னை மகிழ்விக்க

வாழ்த்திருக்கும் – உன்னை ஊக்குவிக்க
வளமிருக்கும் – உன்னை உய்ர்த்திவிட

அறிவுரை இருக்கும் – உன்னை நெறிப்படுத்த
அலங்காரம் இருக்கும் – உன்னை அழகுபடுத்த

மிடுக்கிருக்கும் – உன் வெற்றியில் மகிழ
துடுக்கிருக்கும் – உன்னுடன் விளையாட

கனவிருக்கும் – உன்னை உயர்த்திப் பார்க்க
கடனிருக்கும் – உன்னை உயர்த்தி விட

 

தன்னலம் பாரார் – உன்னலம் பேணிட
பொன் நிலம் சேர்ப்பார் – உன்வளம் உயர்த்திட

தன்னுடல் சோரார் – உன்னுடல் வளர்த்திட
தன்னுயிர் கொடுப்பார் – உன்னுயிர் காத்திட

தந்தையாய் மாறிடு – உன்
தந்தையை உணர்ந்திட

சிறந்த தனயனாய் வாழ்ந்திடு –
உன் தந்தை மகிழ்ந்திட

                 அராலியூர் அருட்செல்வம்

Tuesday, 25 February 2025

நரிகள் வாழ்ந்திட

வெட்டு ஒன்று துண்டு ரண்டு சொல்லாதீங்க
வெளிப்படையாய் வார்த்தைகளைக் கொட்டிடாதீங்க

அமைதியாக இருப்பவனை நம்பாதீங்க – அவன்
அடுத்து என்ன செய்வதென்று யோசிக்கிறாங்க

நரிகள் வாழும் பூமியிது சொல்லுறேனுங்க
நல்லவன்போல் எல்லாரும் நடிக்கிறானுங்க

அமைதியாக இருப்பவனே அறிவாளியாம்
அடுத்தவன் வம்புக்கவன் போவதில்லையாம்

நேருக்குநேர் கேட்டுவிட்டால் கோபக்காரனாம்
நெத்தியடி கொடுத்துவிட்டால் அகங்காரனாம்

முகத்துக்குநேர் சொல்லுதற்கு துணிவு இல்லீங்க
முதுகுக்குப் பின் நரிக்கதைகள் பரப்புறானுங்க

ஊருக்கெல்லாம் அமைதியாக நடிக்கிறானுங்க
உள்ளுக்குள்ளே சுயநலமாய்ச் சுத்துறானுங்க

கொள்கை என்ற ஒன்றை மட்டும் கேட்டுடாதீங்க
நரிகள் அதை விற்று ரொம்ப நாளாச்சுங்க

நரிகள் இங்கே நல்லவராய் சுத்துறாருங்க
நல்லவர்க்கு வாழ இங்கு முடியாதுங்க


             அராலியூர் அருட்செல்வம்