Saturday, 12 September 2026

என்ன படைப்பு

கட்டுக் கட்டாய்ப் பொய்களையும் சொல்லாதீங்க
கடவுள் அதைப் பார்க்கிறாரு மறக்காதீங்க

நேருக்கு நேர் கதைப்பதற்கு அஞ்சாதீங்க
நேர்மைதனை வாழ்க்கையிலே மறக்காதீங்க

ஊருக்கெல்லாம் நல்லவராய் நடிக்காதீங்க
உள்மனதைக் கேட்பதற்கு மறக்காதீங்க

வசதியாய் வாழ்பவரைப் போற்றுராருங்க – அவர்
வலுவிழந்தால் எட்டித் தாமும் ஓடுறாருங்க

நரித்தனங்கள் செய்வதற்கு எத்தனை பொய்கள் - அவர்
நல்லவராய் நடிப்பதற்கு எத்தனை பொய்கள்

வசதியாக வாழ்வதற்கு எத்தனை பொய்கள்
வஞ்சகமாய் வெல்வதற்கு எத்தனை பொய்கள்

உண்மையாக வாழ்பவரை மிதிக்கிறாருங்க – அவர்
ஒத்து ஊதி வாழ்பவரை மதிக்கிறாருங்க

வெளிப்படையாய்க் கதைப்பவனே இளிச்ச வாயனாம் – அவன்
வஞ்சகனாய் அமைதி காத்தால் நல்ல மனிதனாம்

நல்லவனாய் வாழுபவர் நாலு பேருங்க – அவரை
நாசமாக்க ஓடுபவர் ஏழு பேருங்க

களவு சொல்லி வாழுபவர் நாலு பேருங்க
களவெடுத்து வாழுபவர் நாலு பேருங்க

சொந்தங்களைப் போற்றுபவர் நாலு பேருங்க
சொத்துச் சேர்க்க ஓடுபவர் நாலு பேருங்க

புகழுக்காக வாழுபவர் நாலு பேருங்க
போலி வாழ்க்கை வாழுபவர் நாலு பேருங்க

வீழ்ந்தபோது தூக்குபவர் நாலு பேருங்க
வாழும்போது ஒட்டுபவர் நூறு பேருங்க

ஆண்டவனே அனைவரையும் படைத்தாருங்க
அற்புதமாய் அவர் படைப்பை ரசிப்போமுங்க

                             அராலியூர் தி. அருட்செல்வம்

சுட்டெரிக்கும் சூரியன்

நண்பகல் வேளையில் வந்தது சூரியன்
கண்டதும் வெறுப்பு காரணம் வெப்பம்
கண்கள் கூசிடும் காயமும் வெந்திடும்
காற்றும் கூட கனலாய்க் கொதிக்கும்

சூடாய் நம்மைச் சுட்ட வெய்யோன்
மழையும் தந்தது குளிரும் தந்தது
மண்ணும் குளிர்ந்தது மலரும் மலர்ந்தது
பயிர்கள் வளர்ந்தன பஞ்சம் பறந்தது

தென்றற் காற்றும்  தேனாய் வருட
தேகம் இனிக்கும் தேனிசை மலரும்
வாழும் பூமி சொர்க்கம் ஆகிடும்
வையகம் எங்கும் வளமாய் மாறும்

பகலில் கொதித்த பகலோன் போல
பாரினில் உதித்த படைப்பே அப்பா
தப்பைத் திருத்த தணலாய்க் கொதிப்பார்
அறிவை வளர்க்க அனலாய் இருப்பார்

ஒழுக்கம் தவறின் உதைகள் அதிகம்
பொய்யது கூறின் மெய்யது துடிக்கும்
கடுப்பாய் இருப்பார் கனலாய்க் கொதிப்பார்
காணும்போதே தேகம் நடுங்கும்

தணலாய்க் கொதித்த தந்தை நோக்கம்
தனயன் அறிவில் உயர்வது தானே
அனலாய்க் கொதித்த அவரது ஆசை
அன்பு மகனின் அளப்பரும் ஒழுக்கம்

உளியைத் தாங்கிய உதவாக் கல்தான்
உலகம் போற்றும் சிலையாய் மாறும்
சிலையினைப் போற்றும் உலகம் கண்டோம்
சிற்பியின் உழைப்பை உணர்வார் யாரோ!!

                                    அராலியூர் தி. அருட்செல்வம்

Wednesday, 18 February 2026

எழுந்து நில் துணிந்து நில்

தோல்வியைக் கண்டு துவண்டுவிடாதே
துணிவுடன் மீண்டெழ மறந்து விடாதே

நரிகள் உன்னைத் தூற்றிய போதும்
நல்ல குணங்களைத் தொலைத்து விடாதே

வஞ்சகர் உன்னை வஞ்சித்தாலும்
சோர்ந்து விடாமல் வாழ்ந்து காட்டிடு

புதிதாய் ஒன்றை ஒவ்வொரு நாளும்
புத்தியில் ஏற்றிடு கற்று மகிழ்ந்திடு

கற்றவர் உன்னைப் போற்றிடும்போது
மற்றவர் கற்றிட மார்க்கம் காட்டிடு

ஏதோ வாழ்ந்தோம் என்று இல்லாமல்
இவன்தான் மனிதன் என்றிட வாழ்ந்திடு

பொய்யும் களவும் அண்ட விடாதே
புகழின் பின்னால் அலைந்து விடாதே

பெற்றவரை ஊர் போற்றிட வாழ்ந்திடு
பெற்றவரை நீ போற்றியே வாழ்ந்திடு

பயமும் சோர்வும் அண்ட விடாதே
பணத்தின் பின்னால் ஓடி விடாதே

சொந்தக் காலில் சுயமாய் நின்றால்
சொர்க்கம் உந்தன் வாசல் தட்டும்

உன்னை நம்பிடு உலகை வென்றிடு
ஊரும் உலகும் மெய்ச்சிட வாழ்ந்திடு

                 அராலியூர் தி. அருட்செல்வம்