தோல்வியைக் கண்டு துவண்டுவிடாதே
துணிவுடன் மீண்டெழ மறந்து விடாதே
நரிகள் உன்னைத் தூற்றிய போதும்
நல்ல குணங்களைத் தொலைத்து விடாதே
வஞ்சகர் உன்னை வஞ்சித்தாலும்
சோர்ந்து விடாமல் வாழ்ந்து காட்டிடு
புதிதாய் ஒன்றை ஒவ்வொரு நாளும்
புத்தியில் ஏற்றிடு கற்று மகிழ்ந்திடு
கற்றவர் உன்னைப் போற்றிடும்போது
மற்றவர் கற்றிட மார்க்கம் காட்டிடு
ஏதோ வாழ்ந்தோம்
என்று இல்லாமல்
இவன்தான் மனிதன் என்றிட வாழ்ந்திடு
பொய்யும் களவும் அண்ட விடாதே
புகழின் பின்னால் அலைந்து விடாதே
பெற்றவரை ஊர் போற்றிட வாழ்ந்திடு
பெற்றவரை நீ போற்றியே வாழ்ந்திடு
பயமும் சோர்வும் அண்ட விடாதே
பணத்தின் பின்னால் ஓடி விடாதே
சொந்தக் காலில் சுயமாய் நின்றால்
சொர்க்கம் உந்தன் வாசல் தட்டும்
உன்னை நம்பிடு உலகை வென்றிடு
ஊரும் உலகும் மெய்ச்சிட வாழ்ந்திடு
அராலியூர் தி. அருட்செல்வம்