கட்டுக் கட்டாய்ப் பொய்களையும் சொல்லாதீங்க
கடவுள் அதைப் பார்க்கிறாரு மறக்காதீங்க
நேருக்கு நேர் கதைப்பதற்கு அஞ்சாதீங்க
நேர்மைதனை வாழ்க்கையிலே மறக்காதீங்க
ஊருக்கெல்லாம் நல்லவராய் நடிக்காதீங்க
உள்மனதைக் கேட்பதற்கு மறக்காதீங்க
வசதியாய் வாழ்பவரைப் போற்றுராருங்க – அவர்
வலுவிழந்தால் எட்டித் தாமும் ஓடுறாருங்க
நரித்தனங்கள் செய்வதற்கு எத்தனை பொய்கள் - அவர்
நல்லவராய் நடிப்பதற்கு எத்தனை பொய்கள்
வசதியாக வாழ்வதற்கு எத்தனை பொய்கள்
வஞ்சகமாய் வெல்வதற்கு எத்தனை பொய்கள்
உண்மையாக வாழ்பவரை மிதிக்கிறாருங்க – அவர்
ஒத்து ஊதி வாழ்பவரை மதிக்கிறாருங்க
வெளிப்படையாய்க் கதைப்பவனே இளிச்ச வாயனாம் – அவன்
வஞ்சகனாய் அமைதி காத்தால் நல்ல மனிதனாம்
நல்லவனாய் வாழுபவர் நாலு பேருங்க – அவரை
நாசமாக்க ஓடுபவர் ஏழு பேருங்க
களவு சொல்லி வாழுபவர் நாலு பேருங்க
களவெடுத்து வாழுபவர் நாலு பேருங்க
சொந்தங்களைப் போற்றுபவர் நாலு பேருங்க
சொத்துச் சேர்க்க ஓடுபவர் நாலு பேருங்க
புகழுக்காக வாழுபவர் நாலு பேருங்க
போலி வாழ்க்கை வாழுபவர் நாலு பேருங்க
வீழ்ந்தபோது தூக்குபவர் நாலு பேருங்க
வாழும்போது ஒட்டுபவர் நூறு பேருங்க
ஆண்டவனே அனைவரையும் படைத்தாருங்க
அற்புதமாய் அவர் படைப்பை ரசிப்போமுங்க
அராலியூர் தி. அருட்செல்வம்