உலகைப் பார்த்தேன் உரக்கச் சிரித்தேன்
உண்மை சொன்னால் உதைப்பார் தானோ
ஊருக்கெல்லாம் உரக்கச் சொல்வார்
உள்ளுக்குள்ளே சிரித்துக்கொள்வர்
தமிழே தமிழே இனிமை என்பார்
தமிழின் பெருமை உரக்கச் சொல்வார்
தமிழே அறியாத் தமது பிள்ளை
தட்டிக்கேட்க யாருமில்லை
உரிமை வேண்டும் வேண்டும் என்று
உரக்கப் பாடு தமிழா என்பார்
ஊரைவிட்டு ஒழிந்து ஓடி
உலகில் எங்கோ பதுங்கிக் கொள்வார்
சீதனம் என்றால் அசிங்கம் என்று
சிறப்பாய் விறைப்பாய் மேடைப் பேச்சு
சீதனம் கேட்டு சினப்பார் வீட்டில்
சீவியம் வைக்கா வீடும் வேண்டும்
கோயில் கட்டக் காசு வேண்டும்
கோரிக்கைதான் போட்டால் போதும்
கொடுத்தால் தானே தருவார் கடவுள்
கோடி ரூபாய் கொட்டுமையா
பசியால் வாடும் உறவு ஒன்று
பத்தோ நூறோ கேட்டால் போதும்
காசு விளையும் மரத்தை நாமும்
காணவில்லைத் தோழா என்பார்
நன்றி மறவா நாணயம் வேண்டும்
நலமாய் எமக்குக் கற்றுத் தந்தார்
பணத்தைப் பார்த்தே உறவைச் சொல்வார்
பண்பும் இங்கே தொலைந்தே போச்சே!!!