Monday, 20 May 2024

சொர்க்கம்

சொர்க்கம் எங்கே சொர்க்கம் எங்கே
சொல்லடா என்று கேட்டது என்மனம்

பணமே சொர்க்கம் என்றே கூறி
தினமும் அலையும் மனிதர் கண்டேன்

புகழே சொர்க்கம் என்று நினைத்து
புகழின் பின்னே அலைந்தோர் கண்டேன்

மானம் காக்கும் மனமது தானே
மகிழ்ச்சி தந்த சொர்க்கம் என்றார்

கற்றல்தானே சொர்க்கம் என்று
கற்றார் கூற நானும் கேட்டேன்

குழந்தைச் சிரிப்பில் சொர்க்கம் காணும்
குழந்தை மனங்கள் நானும் கண்டேன்

ஏழைச் சிரிப்பில் இன்பம் காண்டார்
அதுவே தங்கள் சொர்க்கம் என்றார்

ஆண்டவன் அடியைப் போற்றுதல்தானே
அடியார் எமக்குச் சொர்க்கம் என்றார்

வெற்றி ஒன்றே சொர்க்கம் என்று
வியர்வை சிந்தி உழைப்போர் கண்டேன்

மான்விழி காட்டி மயக்கும் பெண்ணே
மனிதர் எமக்குச் சொர்க்கம் என்றார்

மற்றோர் துன்பம் களைவது தானே
மனிதன் தேடும் சொர்க்கம் என்றார்

உந்தன் சொர்க்கம் எங்கே என்று
உள்ளம் உரைக்கக் கேட்பாய் மனிதா!!!!

       திரு. அருள்

No comments:

Post a Comment