யாருக்கில்லை அகந்தை – இங்கு
யாருக்கில்லை அகந்தை
கற்றவன் என்றால்
வித்துவச் செருக்கு
காசைக் கண்டவன்
செல்வச் செருக்கு
பலமாய் இருந்தால்
அதிலொரு செருக்கு
புகழில் மிதந்தால்
அதிலும் செருக்கு
அழகாய் இருந்தால்
அதற்கொரு செருக்கு
கலையில் சிறந்தால்
அதுவும் செருக்கு
கண்ணகி காட்டிய
கற்பிலும் செருக்கு
நற்கவி பாரதி
நாவினிற் செருக்கு
நக்கீரர் காட்டினார்
நற்றமிழ்ச் செருக்கு
எமனேறும் பரியே
என்று பாடிய
ஔவையின் பாட்டிலும்
தொங்குது செருக்கு
வரத்தினைப் பெற்ற
சூரனின் அகந்தை
அதனை அழித்தது
முருகனின் அகந்தை
துட்டனாக்கியது
துரியனின் அகந்தை
அவனை அழித்தது
பீமனின் அகந்தை
சிவனை வணங்கும்
சித்தர்கள் ஆயினும்
சிந்தை எங்கும்
அகந்தை தானே
சிவனுக்கிருந்தது
அதுவும் செருக்கு
சிவனுடன் மோதிய
உமையவள் செருக்கு
எனக்கும் இருக்கும்
உனக்கும் இருக்கும்
உலகில் இங்கே
எவர்க்கும் இருக்கும்
செருக்குடன் வாழ்ந்தால்
மகிழ்வும் இருக்கும்
செருக்கைக் கண்டால்
வெறுப்பும் இருக்கும்
செருக்கில் மிதந்தால்
அழிவும் இருக்கும்
செருக்கே செருக்கால்
செருப்பாய் அழியும்
No comments:
Post a Comment